சனி, 6 ஜூலை, 2013

குட்டிக்கதை

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன். என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,

"பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள். சொல்றதை கேட்க மாட்டேங்குது. படின்னா படிக்க மாட்டேங்குது. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே" என்று பாய..

அவளோ,

"அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா" என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,

"ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே"என்று அலற,

அவன் அமைதியாகச் சொன்னான்,

"ஓஹோ, அதான் வெளியே ஓடப் பார்த்தானா..!"

குட்டிக்கதை



ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் சொன்னார்,

"நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு"